Maha Saraswati Yagam

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
ஸரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, நவராத்திரியை முன்னிட்டு வருகிற 17.10.2018 புதன்கிழமை முதல் 19.10.2018 வெள்ளிக்கிழமை வரை மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி யாகங்கள் நடைபெற உள்ளது.

மஹா மாத்ருகா பீடம் :

இந்த உலகமே அன்னையின் அருளாட்சியில்தான் இயங்கி வருகிறது. அவளது விரலசைவுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்பட்டுதான் அனைத்தும் இயங்கி வருகின்றன. சக்தி இல்லையேல் எதுவும் இல்லை. அதே வேளையில் அன்பைப் பொழிவதிலும் கருணையோடு தன் பக்தர்களைக் காத்தருள்வதிலும் அவளுக்கு நிகர் அவளே!

அத்தகைய அன்னை பராசக்திக்கு அகிலமெங்கும் ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் உண்டு என்றாலும், 51 திருக்கோயில்களை மட்டும் ‘அட்சர சக்தியின் 51 பீடங்கள்’ என்று அடையாளம் காண்பித்துப் போற்றி வருகிறோம். அந்தத் திருத்தலங்களுக்குச் செல்கின்ற பேறு கிடைத்தால், தரிசித்தும் வருகிறோம்.

இந்த 51 சக்தி பீடத் திருக்கோயில்களும் வெவ்வேறு இடங்களில் தரிசிக்கக் கிடைக்கின்றன என்றாலும் அவை அனைத்தையும் ஒருவர் சென்று தரிசிப்பது என்பது சற்று சிரமம். காரணம் இந்தப் புனித பீடங்கள் இந்தியாவில் மட்டும் இல்லை. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், திபெத் போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளன.

நம் பாரதத்தில் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காண்டா மாவட்டத்தில் ராஜஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள அம்பாஜி எனும் ஊரில் இந்த 51 சக்தி பீடங்களையும் ஒருசேர தரிசிக்கும் பெரும் பேற்றை நமக்கு வழங்கி உள்ளார் காஞ்சி மகா பெரியவா. ஆம்! காஞ்சி மகா பெரியவாளின் ஆக்ஞைப்படி உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 51 சக்தி பீடங்களுக்கும் இங்கு ஒரே இடத்தில் 51 கருவறைகள் அமைக்கப்பட்டு, ‘அட்சர சக்தியின் 51 சக்தி பீடமாக’ அம்பாஜி விளங்குகிறது.

தற்போது அம்பாஜிக்கும் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இத்தகைய பீடங்களை தரிசிக்கும் பேறு நம் தமிழகத்திலேயே கிடைக்கின்றது என்றால், அது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நினைத்துப் பார்த்தாலே பக்தி உணர்வு நம் மனதில் பீரிடுகிறது இல்லையா!

ஆம்! இந்த 51 சக்தி பீடத் திருத்தலங்களையும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அனந்தலை மதுராவில் அமைந்துள்ள மகா பீடத்தில் (ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்) விரைவில் தரிசிக்க உள்ளீர்கள்; தேவிகளின் ஒருமித்த ஆசிகளையும் பெற உள்ளீர்கள். அதோடு, இந்த புனிதமான பீடத்தில் அன்னையை ஆராதிக்கும் பொருட்டு விசேஷ யாகம் செய்து அவளது அருளைப் பெற உள்ளீர்கள்.

அதற்கு முன்னால், இந்த சக்தி பீடத் திருத்தலங்கள் எப்படி உருவாயின என்கிற புராணக் கதையை ஓரளவு தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும்.

பரமேஸ்வரனை மதியாமல், அவரது வார்த்தைகளை உதாசீனம் செய்து விட்டு தேவியான தாட்சாயணி தன் தந்தை தட்சன் செய்யும் யாகத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அழைப்பு இல்லாமலே செல்ல முற்பட்டாள். அவள் புறப்படும் முன், ‘தாட்சாயணி... வேண்டாம்... உன் தந்தை தட்சன், என்னை அவமானப்படுத்தும்பொருட்டும், தானே இந்தப் பிரபஞ்சத்தில் முதன்மையானவன் என்பதை அறிவிக்கும்பொருட்டும் அகந்தையின் காரணமாக இந்த யாகத்தைச் செய்யப் போகிறான். எனவேதான், உன்னை அழைக்கவில்லை. உனக்குத் தக்க மரியாதையும் அங்கே கிடைக்காது’ என்று ஈசன் சொன்னபோது, ‘உங்களுக்கு ஒரு அவமரியாதை என்றால், அதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.

என் தந்தையே ஆனாலும், அவருக்குத் தக்க பாடம் புகட்டி விட்டுத்தான் வருவேன்’ என்று சொல்லி ஈசனின் அனுமதி இல்லாமலே தட்சனின் யாகத்தில் கலந்து கொள்ளப் போனாள்.

முக்கண்ணன் எச்சரித்தது போலவே அங்கு தாட்சாயணி அவமானப்படுத்தப்பட்டாள். தட்சன் உரிய முறையில் மரியாதை செய்யவில்லை. அதோடு, மகளையும் மாப்பிள்ளையையும் இகழ்ந்து பேசினான். இது பொறுக்காத தாட்சாயணி, ‘உன் மகளாகப் பிறந்ததே பாவம்... இது வேள்வித் தீ அல்ல... பிரேதத்தை எரியூட்ட வளர்க்கப்பட்ட தீ... இதில் பாய்ந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்’ என்று யாகத்துக்கு வளர்க்கப்பட்ட தீயில் புகுந்தாள். புனிதமான தீ தேவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

விஷயம் அறிந்து கோபம் தெறிக்க புறப்பட்டு வந்த சர்வேஸ்வரன் தேவியின் உடலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு ஊழிக் கூத்து ஆடினார். பிரபஞ்சமே கிடுகிடுத்தது. தேவர்கள் நடுங்கி, மகாவிஷ்ணுவிடம் போய்ச் சொன்னார்கள். அவர் தன் சக்ராயுதத்தை ஏவினார். அது பரமேஸ்வரனைப் பின்தொடர்ந்து வந்து, தேவியின் உடலை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தியது. இப்படி தேவியின் உடல்கள் விழுந்த இடங்களே ‘51 சக்தி பீடங்கள்’ ஆயின.

இத்தகைய புனிதமான பீடங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பேற்றை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் பக்தர்களுக்கு வழங்கி உள்ளார். சக்தி தேவிகளின் அருளை அனைவரும் பெறும் வகையில் மகா மாத்ரு யாகங்களை 2014 ஆகஸ்ட் 14 வியாழன் முதல் 17 ஞாயிறு வரை வாலாஜாபேட்டை அனந்தலைமதுராவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடத்திய பெருமை இவரை சார்ந்தது எனலாம்.

தேவியின் வாக்கினாலும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் மகா பீடமாகத் திகழந்து வரும் மாத்ருகா பீடத்தில் 9 அடி உயரத்தில் 18 திருக்கரங்களுடன் மஹிஷாசுரமர்த்தினி, 9 அடி உயரத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, 4 அடி உயரத்தில் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, வாசவி கன்னிகாபரமேஸ்வரி தேவி, ஸ்ரீ பாரதமாதா, ஸ்ரீ குபேரலக்ஷ்மி, ஸ்ரீ மரகதாம்பாள், பஞ்ச லோகத்தில் ஸ்ரீ தங்க அன்னபூரணி, ஸ்ரீ காயத்ரி தேவி போன்ற ஸ்ரீசாக்த தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட சண்டி யாகம், திருஷ்டி துர்கா, நவதுர்கா, சூலினி துர்கா, 2014 பூசணிக்காய்கள் கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதிருத்ரம், மஹா ருத்ரம், 74 பைரவர் ஹோமம், 108 மகா கணபதி ஹோமம், 10 லக்ஷம் ஏலக்காய்களை கொண்டு ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், லக்ஷம் நெல்லிக்கனிகளால் கனகதாரா யாகம், லக்ஷம் லட்டுகளால் குபேரலக்ஷ்மி யாகம், லக்ஷம் தாமரை மலர்களால் அஷ்ட லக்ஷ்மி யாகம், 1,32,000 மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்ப கணபதி யாகம், போன்ற பிரமாண்ட யாகங்கள் நிகழ்த்தி தினம் தோறும் சகல தேவதா ஹோமத்தை நடத்தி வருபவர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இங்கு சமீபத்தில் 6,000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு 12 க்கு 21 அடி என்ற அளவில் பிரமாண்ட யாக குண்டம் அமைத்து, மஹா பிரத்யங்கிரா யாகத்தை ஒரு வாரம் செய்தபோது சுமார் ஒண்ணரை லட்சம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள். ஏழு நாட்களும் வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதுவரை வேறு எங்கும் நிகழ்ந்திராத இந்த யாகத்தின் முடிவில் ‘யக்ஞஸ்ரீ’ பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.

இந்த மகா பிரத்யங்கிரா யாக அக்னியில் தேவி பிரவேசித்து ஸ்வாமிகளுக்கு காட்சி கொடுத்து அர்த்த மேருவுடன் ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி ஆலயம் அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாத்ருகா பீடம் என்று பெயரிட வேண்டும் என்று அனுக்ரஹித்து ஆசிர்வதித்தாள்.

அதைத் தொடர்ந்து பல்வேறு மகான்கள் கலந்து கொண்டு இந்த மகா பீடத்துக்கான பூமி பூஜை துவங்கியது. இந்தத் திருப்பணியைத் துவங்கும் வேளையில் ‘10,000 மாதுளைகள் கொண்டு எனக்கு யாகம் செய்து அதன் பின் மகா பீடம் அமை’ என்று உத்தரவும் கொடுத்தாள். இந்த மகா காளி யாகம் நடைபெற்ற வேளையில் அம்பாள் யக்ஞ ரூபிணியாகக் காட்சி கொடுத்து ஜுவாலாமுகி வந்து யக்ஞம் செய்த பின் திருப்பணியைத் தொடரவும் என்று உத்தரவிட்டாள்.

இதற்கும் தேவியே ஒரு லீலையை நிகழ்த்தினாள். மகா காளி யாகத்தின்போது தற்செயலாக இமாசலப் பிரதேசத்தில் இருந்து இரண்டு துறவிகள் வந்திருந்து, ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளை இமாசலப் பிரதேசம் வருமாறு அழைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர விழைந்தார்கள்.

தேவியே உத்தரவு கொடுத்தாயிற்று. அதன் பின் பத்து பேர் கொண்ட குழுவுடன் 15 நாட்கள் இமாசலம், ஹரித்துவார், சண்டிகர், பிருந்தாவன், டெல்லி, ரிஷிகேஷ், குருக்ஷேத்ரம், மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள சக்தி பீடம், சித்தி பீடம் போன்றவற்றில் யாகம் செய்து, தேவியர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற்று, அங்கிருந்து கல், மணல், நீர், வேர் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அம்பாளின் ஆக்ஞைப்படி யாக குண்டமானது சக்தி (சூலம்) வடிவில் அமைத்து, சூலத்துக்குள் 51 யாக குண்டங்கள் அமைத்து, 51 சிவாச்சார்யர்களுடன் பிரமாண்டமாக 51 சக்திபீட யாகங்களை செய்து ஸ்ரீ யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவியை பிரதிஷ்டை செய்து நாள்தோறும் ஷண்மத ஹோமங்களை செய்து வருகிறார்.

இத்தகைய சிறப்புகளுடன் ஸ்ரீமாத்ருகா பீடமாகவும் மஹாபீடமாகவும் திகழ்ந்துவரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு முப்பெரும் தேவியரின் அருள்பெற வருகிற 17.10.2018 புதன்கிழமை மாலை மற்றும் 18.10.2018, 19.10.2018 ஆகிய தினங்களில் ஸ்வாமிகளின் அருளானைப்படி சிறப்பாக நடைபெற உள்ளது. உலக மக்கள் அனைவரும் யாகத்தில் பங்கேற்று, ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் அருளுடன் சக்தி தேவியர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ மகா பீடம் அன்புடன் அழைக்கிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images