வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற17.08.2019 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சங்கடஹர மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.
விநாயகப்பெருமான் வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர். இவரை வழிபடுவதற்கு மிகவும் விசேஷமான நாள் சதுர்த்தி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. இந்நாளின் மேற்கொள்ளும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு விநாயகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு எந்த குறையும் இருப்பதில்லை என்றே புராணங்களில் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் விநாயகருக்கு நடைபெறும் ஹோமம்,அபிஷேகம், பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும், நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயக தன்வந்திரியை வேண்டி நடைபெறும் ஹோமத்தில் கொழுக்கட்டை, மோதகம், நவசமித்துகள், அறுகம்புல், கரும்பு, விசேஷ மூலிகைகள்,பட்டு வஸ்திரங்கள், நெய், தேன், புஷ்பங்கள், பழங்கள், நிவேதனங்கள், சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்று மஹாதீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் பங்கேற்கும் பக்தர்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி பிரசாதங்கள் வழங்க உள்ளனர்.
மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், மஞ்சள், குங்குமம், சந்தனம்,அபிஷேக திரவியங்கள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களை அளித்து குடும்பத்தினருடன் இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.