196th Jayanthi Festival

மக்களுக்காக வாழ்ந்த வள்ளல் பெருமான் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் வள்ளலார் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் பிரார்த்தனைகளும், அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது.

வருகிற 05.10.2018 வெள்ளிக்கிழமை 196 ஆவது வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கோ பூஜை, யாகம், மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

வள்ளலாரின் போதனைகள் :

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும். பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் :

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்ற அறியுறைகள் வழங்கியவர்.

வள்ளலார் கூறும் 42 விதமான பாவங்கள் :

* நல்லவர் மனதை நடுங்க வைப்பது.

* வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

* தானம் கொடுப்போரைத் தடுப்பது.

* சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

* மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

* குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

* ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

* தருமம் பாராது தண்டிப்பது.

* ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

* உயிர்க் கொலை செய்பவருக்கு உபகாரம் செய்வது.

* களவு செய்பவருக்கு உளவுகள் சொல்வது.

* பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

* ஆசை காட்டி மோசம் செய்வது.

* போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

* வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

* பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

* இரப்பவருக்குப் பிச்சை இல்லை என்பது.

* கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

* நம்பியவரை நட்டாற்றில் கை நழுவுவது.

* பயந்து ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

* கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

* காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

* கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

* கருவைக் கலைப்பது.

* குருவை வணங்கக் கூசி நிற்பது.

* குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

* கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

* பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

* கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

* மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.

* கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

* அன்புடையவருக்குத் துன்பம் செய்வது.

* குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

* வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

* பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

* பொது மண்டபத்தை இடிப்பது.

* ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

* சிவனடியாரிடம் சீற்றம் கொள்வது.

* தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

* சுத்த ஞானிகள் மீது அவதூறு சொல்வது.

* தந்தை-தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

* தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள். இத்தகைய மாண்புகள் பொருந்திய வள்ளல் பெருமானுக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு குரு அருள் பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images