

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உடல் நோய், மன நோய் நீங்க பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு வருகிற 28.11.2019 முதல் 14.12.2019 வரை காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை தைலாபிஷேகமும் மாலையில் பாராயணங்களும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 14.12.2019 கர்பரக்ஷாம்பிகை ஹோமத்துடன் 108 சுஹாசினிகள் பங்கேற்கும் சுஹாசினி பூஜை என்கிற சுமங்கலி பூஜையும் நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி தைலாபிஷேக பலன்கள் :
ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட தேதியில் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபம் மற்றும் ஹோமத்துடன், நல்லெண்ணெயை கொண்டு உலக மக்களின் ஆரோக்ய கருதியும், ருண ரோக நிவர்த்திக்காகவும், நவக்கிரக தோஷ நிவர்த்திக்காகவும், உடல் ரீதியாகவும், சர்ம ரீதியாகவும் ஏற்படும் தோஷங்கள் குறைவதற்காகவும் தைலகாப்பு எனும் தைலத் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
நல்லெண்ணெய் என்பது எள் விதையிலிருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விசேஷ திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷங்கள் உள்ளவர்கள் பரிகார செய்து வருகிறார்கள். சனி பிரீத்திக்காக எள்ளு தானம், எள்ளு ஹோமம், எள்ளு எண்ணெய் கொண்டு ஆயுள் தோஷங்கள் விலக தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றுவது போன்ற வைபவங்கள் சனி பிரீத்திக்காக நம் முன்னோர்கள் செய்து வருகிறார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நல்லெண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள் விலகவும், மன நோய்கள் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது இந்த தைலாபிஷேகம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
கர்பரக்ஷாம்பிகை யாகத்துடன்
108 சுமங்கலிகள் பங்கேற்கும் 108 சுமங்கலி பூஜை :
தம்பதிகள் நலன் கருதியும், மாங்கல்ய பலம் கூடவும், மரண பயம் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும், 14.11.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கர்பரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து 108 சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அனைவரும் வருக, இறையருளுடன் குருவருள் பெறுக. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.