

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற 06.10.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ருத்ர ஹோமத்துடன் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
சனி பிரதோஷ மஹிமை :
சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அவற்றில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷமன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
சனி பிரதோஷத்தில் நடைபெறும் பூஜைகளிலும், யாகங்களிலும் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு வந்தால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். மேலும் நந்திக்கும் சிவனுக்கும் வில்வம், வன்னி, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது.
சங்காபிஷேகத்தின் மஹிமை :
இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான். மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்றுதான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார்.
சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது. அபிஷேகத்திற்கு சங்கைப் பயன்படுத்துவானேன் என்று கேட்கலாம். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.
ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே
பவமாநாய தீமஹி
தந்ந சங்க ப்ரேசோதயாத்
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தின் மேல் சிவன் உள்ளதால் இவரை சனி பிரதோஷத்தில் ஏக காலத்தில் இருவரையும் தரிசனம் செய்து கடன், வறுமை, நோய் பயம், பஞ்சம், வறுமை, பட்டினி நீங்கி மேலும் புத்திரத்தடை, திருமணத்தடை விலகி மாங்கல்ய பலம் கிடைத்து வாழவும், எதிரிகளின் எதிர்ப்பு விலகவும். அனைத்து துன்பங்களும் நீங்கவும் பிரதோஷத்தன்று நடைபெறும் ருத்ர யாகத்திலும், சங்காபிஷேகத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version