

பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத்தரும் வருதினி ஏகாதசி
வருகிற 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை வருதினி ஏகாதசி முன்னிட்டு தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருதினி ஏகாதசி முன்னிட்டு தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகமும் மஹா தன்வந்திரி ஹோமமும் வருகிற 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை வருதினி ஏகாதசி முன்னிட்டு நடைபெறுகிறது.
வருதினி ஏகாதசி விரதம் சிறப்பு
வைகாசி மாதம் தேய்பிறையில் வருகிற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்ற பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத் தரக்கூடியது.
ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், தந்து மாறனும் அனுசரித்து மேல் உலகம் அடைந்தார்கள். பிரம்ம தேவனின் 5-வது தலையைக் கொய்த சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவவிமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.
வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.
வருதினி என்றால் ‘காப்பது’ என வட மொழியில் பொருள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் நோயிலிருந்து, வறுமையிலிருந்து, பாபத்திலிருந்து காக்கப்படுகிறார்கள். மீண்டும் பிறவி எடுக்கும் பிணியிலிருந்து விடுபடுகிறார்கள்.
இந்த நாளில் விரதமிருந்தால் கொடிய, நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஒரு அபாக்யவதி பாக்கியம் பெறுவாள். விலங்குகள் மறு ஜென்மம் எடுக்கும் பிணியிலிருந்து விடுபடும்.
வருதினி ஏகாதசி விரதம் இருந்தே மந்தத அரசர் முக்தி பெற்றார். இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்த துந்துமாரர் சிவபெருமானின் சாபத்தால் ஏற்பட்ட கொடிய தொழு நோயிலிருந்து விடுதலை பெற்றார்.
மந்தத அரசரின் கதை
மந்தத அரசர் ராஜ்யத்தை நன்முறையில் பரிபாலித்த ஒழுக்க சீலர். அவர் யாதவ ராஜா ஷா பிந்துவின் மகள் பிந்துமதியை திருமணம் செய்தார். அவர்களுக்கு முசுகுந்தர், அம்பரிஷர், புருகுத்சர் என மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களது 50 பெண்களை ஸௌபரி மகரிஷிக்கு திருமணம் செய்வித்தனர்.
மந்தத அரசர் ஒரு நாள் காட்டில் தவம் புரிந்துகொண்டு இருந்தார். அப்போது ஒரு கரடி அங்கு வந்து அவர் காலை கடிக்க ஆரம்பித்தது. தவத்தை கலைக்காத அரசரை காட்டிற்குள் இழுத்து சென்றது. அரசரும் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் அந்த இடத்தில் தோன்றி கரடியை தனது சக்கரத்தால் கொன்றார்.
இழந்த காலை திரும்ப பெற வேண்டி நின்ற மந்தத அரசரை ஸ்ரீமன் நாராயணன் வருதினி ஏகாதசி அன்று மதுரா சென்று மகாவிஷ்ணுவை ஆராதித்து விரதம் இருக்குமாறு பணித்தார். அரசரும் அப்படியே செய்து இழந்த காலை பெற்றார்.
வருதினி ஏகாதசி விரதமிருப்போருக்கு பல வகையான தானங்கள் செய்த பலன் உண்டு. என்ன வகையான தானங்கள் தெரியுமா?
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த பலனை இந்த ஏகாதசி விரதம் அளிக்கிறது.
சூரிய கிரகணம் அன்று கை நிறைய தங்கம் தானம் செய்த பலனுக்கு ஒப்பானது.
குதிரைகளை தானம் அளிப்பதை விட யானைகளை அளிப்பது மேலானது. அதை விட மேலானது நிலத்தை தானமாக வழங்குவது. பூமி தானத்தை விட எள் தானம் சிறந்தது, அதை விட தங்கம் மேலானது. தங்கத்திலும் சிறந்தது அன்னதானம். அதை விட சிறந்தது ஞானத்தை பிறருடன் பகிர்ந்து கொள்வது. வருதினி ஏகாதசி விரதம் இந்த அத்தனை தான பலன்களையும் அளிக்க வல்லது.
கன்யாதானம் இவை எல்லாவற்றையும் விட சிறப்பு மிக்கது. அந்த பலன் வருதினி ஏகாதசி விரதம் மூலம் நமக்கு கிட்டும். வருதினி ஏகாதசியின் சிறப்பை கேட்போருக்கும், படிப்போருக்கும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் உண்டு. மேலும் அரசு வழிகாட்டுதல் படி யாகங்கள் பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் நேரடியாக யாகத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.