

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால், பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இருவரும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.
இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் தினமும் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழ்வோம்.
Tamil version