வாலாஜாபேட்டை, மே 01, 2013.
தொழிலாளர்கள் நலன் கருதியும், தொழிலாளர் குடும்பங்களின் நலன் கருதியும், நிர்வாகத்தினருக்கும், தொழிலாளருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவும், நன்மதிப்புக் கூடவும், அவர்களின் மனரீதியான நோய்களும், உடல் ரீதியான நோய்களும் நீங்கி ஆனந்தம் பெற மே தினத்தன்று ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி மூலவர் மற்றும் தன்வந்திரி உற்சவருக்கு 8ஆம் ஆண்டு 500 லிட்டர் தேன் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அபிஷேகத்தைக் காணக் கண்கோடி வேண்டும், அந்த அளவிற்கு அபிஷேகத்தின் போது தன்வந்திரி பகவானின் முகம் பிரகாஷமாய் இருந்ததைக் கண்டு பக்தர்கள் தங்களின் உடற்பிணி தீர மனமுருக ப்ரார்த்தனை செய்தனர். மேலும் சென்னையைச் சேர்ந்த 'லிப்கோ' குடும்பத்தினர்களும் தேனாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிரார்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற 8ஆம் ஆண்டு இலவச மருத்துவ முகாமிலும் பக்தர்கள் கலந்து கொண்டு, மருத்துவர்களை அணுகி தங்களின் உடல் நிலைப் பற்றிய கருத்துக்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஆலேசனைப் பெற்றுச் சென்றனர். வந்திருந்த மதிப்பிற்குரிய மருத்துவர்கள் அனைவரும் இன்முகத்தோடு சேவை புரிந்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மனம் மகிழ்ந்தனர்.
மேலும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.