64 Bhairavar Yagam with Ashta Bhairavar 64 Dhraviya Abhishekam

தேய்பிறை அஷ்டமியும் காலபைரவர் வழிபாடும்:

ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். மற்றும் இந்நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.

பிரம்மதேவரின் கர்வத்தை அடக்கியவர் காலபைரவர் :

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றியவரே கால பைரவர்,

தீர்த்தபாலகர், க்ஷேத்திரபாலகர் எனும் அஷ்ட காலபைரவர் :

பரமேஸ்வரன் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீ மஹா பைரவர் மூர்த்தியை உற்பத்தி செய்து அவரிடம் உலகினை காக்கும் பொறுப்பினை அளித்து அசுரர்கள் தொல்லை அதிகரிக்கும்பொழது சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வெல்வதாக புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீ பைரவர் ஆவார். ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர் ஷேத்ரபாலகர், கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்தி விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகர் என்றும் மக்களிடம் அறிவு சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

பைரவரின் பல்வேறு சிறப்புகள் :

பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கௌமார, சௌர மார்க்கங்களிலும் ஜைனம், பௌத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர். பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

64 பைரவர் யாகம் மற்றும் பூஜையின் பலன்கள் :

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் எல்லா வளங்களும் பெறலாம். மற்றும் தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்னைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம். இவர் சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

64 யாககுண்டங்கள், 64 பைரவர் யாகம், 64 தீபங்கள், 64 திரவிய அபிஷேகங்கள் :

இத்தனை சிறப்புமிக்க பைரவருக்கு பிரதி வருடம் கார்த்திகை மாதம் பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு 64குண்டங்களில் 64 நபர்கள் அமர்ந்து 64 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 17.11.2019 ஞாயிற்று கிழமை மாலை முதல் 19.11.2019 செவ்வாய்க்கிழமை மாலை வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர், ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் 64 பைரவர்களுக்கு 64 தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 சிவாச்சரியர்களால் 64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

இவ்வைபவத்தில் தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று திருவருளை பெறுமாறு 64 பைரவர் சகித 64 யோகினிகளை ப்ராத்திக்கின்றோம்.

மேற்கண்ட மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images