வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகங்கள் நடைபெற்றது.
அஷ்ட பைரவர்கள்: மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.
தொல்லைகள் அகலவும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகவும், கர்ம வியாதிகளில் இருந்து விடுபடவும், அஷ்ட தரித்திரம் விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடவும், வழக்குகளில் வெற்றி பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக அஷ்ட பைரவர், மஹா காலபைரவர், சொர்ணாகர்ஷண பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமங்களிலும், பால், தயிர், மஞ்சள், அரிசி மாவு, இளநீர், விபூதி, பஞ்சாமிருதம் போன்ற 16 பொருட்கள் கொண்டு நடைபெற்ற மஹா அபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
இதில் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எலுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டு, பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அஷ்ட பைரவர் யாக பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.