இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.
திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பணத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஒருவர் வீடு கட்டி விட்டால், அதைப் பார்த்துப் பலர் பொறாமைப்படுகிறார்கள். ஒருவர் குறுகிய காலத்துக்குள் அதிக சம்பளத்தில் ஒரு வேலையில் அமர்ந்து விட்டால், அதைப் பார்த்து உடன்பிறந்த சொந்தங்கள் உட்பட அக்கம்பக்கமே பொறாமைப்படுகிறது. கணவன் - மனைவி ஜோடியாக - அந்நியோன்னியமாக - சந்தோஷமாக இருந்தால், அதைப் பார்த்தும் பலருக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஒருவரது வாழ்வில் கூடவே கூடாத குணம் - பொறாமை. இது உறவுகளைப் பிரித்து விடும். நண்பர்களை அந்நியப்படுத்தி விடும்.
திருஷ்டிகளைக் களையும் உப்பு, மிளகாய், எலுமிச்சம்பழம், தேங்காய், கடுகு, கற்பூரம், மஞ்சள், குங்குமம், சுண்ணாம்பு போன்ற பல விதமான பொருட்களில் பூசணிக்காய்க்கு முதலிடம் உண்டு. சகல திருஷ்டிகளையும் போக்கும் குணத்தை பூசணிக்காய்க்கு ஆண்டவன் வழங்கி உள்ளான். அமாவாசை தினங்களில் தெருக்களிலும், வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பூசணிக்காய் உடைப்பது & பலரது திருஷ்டியைப் போக்குவதற்காகத்தான். இத்தகைய பொறாமைதான் கண் திருஷ்டியில் முடிகிறது. பிறரது மோசமான கண் பார்வை உங்கள் மீது விழுந்து விட்டால், அந்த திருஷ்டியை உடன் களைவதுதான் முக்கியம். ஒருவருக்குக் கண் திருஷ்டி என்பது இருக்கவே கூடாது.
திருஷ்டி, திருஷ்டி என்கிறோமே... என்ன அர்த்தம்?திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும்.