வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திர் ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கைவளத்திற்காகவும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று 01.07.2019 திங்கள்கிழமை காலை 10.30 மணிமுதல் நன்பகல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.
உலகம் முழுவதும் மருத்துவம் ஒரு உன்னதமான தொழிலாகக் கருதப்படுகிறது. உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கி இருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவரே. நாட்டிற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் இந்தியாவில் இது ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறர் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய மருத்துவர்கள் தங்களது சிறந்த முயற்சியை அளிக்கின்றனர்.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்பாவித்து வரும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை நம்பிக்கையுடன் மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எத்தகைய நோய்கள் இருந்தாலும் குணமாகிறது என்பது மக்களின் நம்பிக்கையா உள்ளது. ஆகவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பீடத்திற்கு வருகை புரிந்து யாக பூஜைகளில் கலந்து கொண்டு நலம் பெற்று செல்கின்றனர்.
மேலும் மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களும் மருத்துவம் படித்துவிட்டு தொழில் தொடங்க நினைப்பவர்களும் இங்கு வந்து மருத்துவ உபகரணங்களை வைத்தியநாத தன்வந்திரி பெருமாளின் பொற்பாதங்களில் வைத்து பிரார்த்தித்து மருத்துவ படிப்பையும், மருத்துவ தொழிலையும் துவங்குகின்றனர். இத்தகைய சிறப்புகளுடைய ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மருத்துவ குடும்பங்களின் நலம் வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், அர்ச்சனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சத்ரு சம்ஹார காரிய சித்தி ஹோமத்துடன் மஹா கணபதி ஹோமம், சொர்ண பைரவர்ஹோமம், காலபைரவருக்கு குருதி பூஜையும் நடைபெற்றது. இப்பூஜையில் தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி காணவும், தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கவும், கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கவும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கவும், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.