Navakshari Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிறா 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை திரு ஆடி பூரத்தை முன்னிட்டு நவாக்ஷரி ஹோமமும் நவாவர்ண பூஜையும் காலை 10.00 மணி முதல் நண்பகல் 2.00மணி வரை நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடம் மங்கையர்களின் மஹாபீடமாக விளங்கி வருகிறது. இங்கே ஆரோக்ய லக்ஷ்மி தாயார், மாதா அன்னபூரணி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி, காயத்ரீ தேவி, சரஸ்வதி தேவி, மஹா ப்ரத்யங்கிரா தேவி, மஹிஷாசுர மர்த்தினி, மரகதாம்பிகை, நவகன்னிகைகள், அனுசுயா தேவி போன்ற பெண் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, பிரதி மாதம் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி, பஞ்சமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும் பௌர்ணமியில் திருமண வரம் தரும் யாகமும், குழந்தை வரம் தரும் யாகங்களும் நடைபெற்று வருகின்றது. மேலும் அமாவாசையில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி யாகமும், சரப சூலினி யாகமும், நவதுர்கா ஹோமமும், சண்டி யாகங்களும், ஸ்ரீ சாக்த தேவியின் அருள் பெற அவ்வப்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அம்பாளுக்கு உறிய ஆடி பூரத்தில் நவாக்ஷரி ஹோமமும், நவாவர்ண பூஜையும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி சிறப்பாக நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகத்தின் நிறைவாக அம்பாளின் அருட் பிரசாதமான மாங்கல்ய சரடும், சௌபாக்ய பொருளும், இஞ்சி தேன் பிரசாதமும் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகள் வழங்கி வழங்க உள்ளார்.

பராசக்தியை வழிபடும் வழிபாட்டு முறைதான் ஸ்ரீசாக்தம். ஷண்மதத்தில் ஒன்றாக விளங்கி வருகிறது சாக்தமதம்.சக்தித்தாய் அனைத்துலகையும் ஈன்று பாதுகாத்து உயிரினங்களுக்கு அன்னையாகவும் விளங்குபவள் பராசக்தி ஆவாள். அவள் கண்ணசைவில் இவ்வுலகம் காற்று, உயிரினங்கள் அனைத்தையும் இயக்குபவளாகவும் இயங்கு சக்தியாகவும் விளங்குபவள். ஸ்ரீ சக்தி பூஜைகளில் முதலாவதாகவும் மிக மேன்மையானதாகவும் முன்னிருத்திச் செய்யப்படும் சிறப்பான பூஜைகளில் ஒன்று நவாவரண பூஜையாகும். இந்த பூஜை குறித்து ராமாயணம்,மஹாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் உபநிஷத்துகள், ஸூக்தங்கள், பிரம்மாண்ட புராணம் போன்ற புராணங்களிலும் குறிப்புகள் உள்ளன.

ஸ்ரீ சக்தியாகிய அம்பிகை பாற்கடலின் நடுவில் "ஸ்ரீ நகரம்' என்னும் பொன், மணி மற்றும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கோட்டையின் உள்ளே 9 பிரகாரங்களுக்கு நடுவில் அமர்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்களின் ஆசை அபிலாஷை போன்றவற்றை குறைவின்றி பூர்த்தி செய்கிறாள். அவளைச்சுற்றி அனைத்து தெய்வதேவதைகளும் ஒன்பது வரிசையில் அமைந்து அம்பாளின் கருணைப்படி உயிர்களுக்கு வேண்டியவற்றை அருள்கின்றனர். ஒன்பது ஆவரணங்களாகிய பிரகாரங்களில் உள்ள தெய்வதேவதைகளை பூஜை, தர்ப்பணம் போன்றவற்றால் போற்றித் துதித்து வழிபடுவது “நவாவரணபூஜை” எனப்படும். எந்த வழிபாட்டிலும் பூஜையும் தர்ப்பணமும் ஒரே நேரத்தில் செய்யப்படுவது இல்லை. ஆனால் இந்த நவாவரணபூஜையில் மட்டும் பூஜை செய்யும் போது மலரால் "பூஜாயாமி'எனக்கூறி செய்யப்படுவதும் உடனே இஞ்சித் துண்டத்தில் நனைத்தபாலை தெளித்து "தர்ப்பயாமி நம:' என தர்ப்பணபூஜை செய்து அர்ச்சிக்கும் பழக்கம் உள்ள பூஜையாகும்.

பரமசிவன் பார்வதிக்கு பலவகை தந்திரபூஜை முறைகளை உபதேசம் செய்தார். அனைத்துத் தந்திரங்களின் சாரமாக ஸ்ரீவித்யா உபாசனை என்னும் தந்திரத்தையும் உபதேசித்தார். அம்பிகையின் மூல மந்திரங்களில் சிறந்த 18 எழுத்துகளைக் கொண்ட மூலமந்திரம் ஸ்ரீவித்யா மந்திரமாகும். அம்பிகையே அனைத்திற்கும் முழுமுதல் கடவுளும் காரண காரணியாகவும் ஆவாள் என எடுத்துக் காட்டும் மந்திரமுமாகும். தகுந்த குருவிடம் ஸ்ரீவித்யா மந்திரத்தை உபதேசமாகக் கொண்டவர்கள் மட்டுமே நவாவரண பூஜையை செய்யவேண்டும் என்ற வரன்முறை உள்ள பூஜை ஆகும். சாக்த பூஜை, மந்திரம், தந்திரம் என்னும் இருமுறைகளில் செய்யப்படும். நவாவரண பூஜை தந்திரங்கள் வழியில் முத்திரைகள் அடிப்படையில் செய்ய வேண்டியிருப்பதால் இந்த பூஜையை செய்யும் சாதகர்கள் அதிகம் பேசக்கூடாது. இதில் யாகம் என்பது ஒன்று என்றாலும் பூஜை செய்யும் சாதகன் தன்னைத்தானே பூஜிக்கும் விதமாக ஹோம அக்னியாக மாற்றிக் கொண்டு இந்த பூஜையைச் செய்கிறான் என்பதே இப்பூஜையில் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இப்பூஜையில் யாகம் நடக்கும்போது செய்யப்படும் பலவித பூஜைகள் தவிர சிறப்பாக அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜை செய்பவர் தன்னைத் தானே மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக் கொள்ளும் பூஜை, ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, "அஷ்டகந்தம் என்னும் வாசனைத் திரவியங்கள் கலந்த பாலுக்குரிய பூஜை, " பஞ்ச பஞ்சிகா என்னும் ஐந்துவகை ஆசனங்களுக்குரிய பூஜை, ஜகன்மாதாவான ஸ்ரீபுவனேஸ்வரிக்கான பூஜை போன்ற வித்தியாசமான பூஜைகளும் அடங்கும். தவிர சுவாசினி பூஜை, கன்யாபூஜை, வேதம், நாட்டியம், கானம், பாராயணம் போன்ற சிறப்புகளும் உண்டு.

இப்பூஜை நடக்கும்போது "வரிசை” எனப்படும் ஒவ்வொரு ஆவரணத்திற்கும் தெய்வ தேவதைகளின் பூஜை முத்திரைகளால் செய்யப்பட்டு, முடிந்த பிறகு தீபாராதனை செய்யப்படும். இவ்வாறு ஒன்பது வரிசைக்கும் ஒன்பது தீபாராதனை செய்யப்படும். இதன் மூலம், வாலை, குமாரி, பெண், தாய், ஸ்ரீவித்யா, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி,மஹாகௌரி போன்ற அம்பாளின் அனைத்து ஸ்வரூபங்களும் போற்றி வழிபடப்படுகிறது. இந்த நவாவரண யாகத்தை தரிசனம் செய்வது என்பது அம்பாளின் பீடங்கள் ஒன்றில் நடக்கும் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலனை உடையது என கூறப்படுகிறது.

இந்த நவாவரண பூஜையை தரிசனம் செய்தால், நற்குழந்தைப்பேறு, அனைத்து தோஷங்கள் நீங்குதல், அஷ்ட ஐஸ்வரியம் பெருகுதல், உத்தியோகம், வியாபாரம் அபிவிருத்தி, ஆனந்தமான வசதியான அமைதியான நல்ல இல்லற வாழ்வு ஆகியவை கிடைக்கும். பூஜை முடிந்த பிறகு, "சாமான்யார்க்கியம் எனப்படும் வலம்புரிச்சங்கில் வார்க்கப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும். "விஷேஷார்க்கியம் எனப்படும் பால் பிரசாதமாக வழங்கப்படும். இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பாளின் பூரணமான அருளையும் பூஜையின் முழுப்பலனையும் பெறுவார்கள் என இந்த யாகத்தின் பலன் கூறும் பலஸ்துதி சுலோகம் தெரிவிக்கிறது.

சக்தி வழிபாட்டின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ சண்டி யாகம். இத்தகைய பலன்தரும் அபூர்வமாக நடைபெறும் "நவாவரணயாகம் நடத்தப்படுகிறது. இது எப்போதும் நிகழும் நிகழ்வல்ல, எப்போதோ பங்குபெற கிடைக்கும் வாய்ப்பாகும்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சாக்த வழிபாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு தை மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சிறப்பு பூஜையாக வருகிற ஆடி மாதம் 19 ஆம் தேதி (04.08.2019)ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரைஸ்ரீ நவாவரண பூஜை, ஜபம், பாராயணம், மஹாயாகம் நடைபெறுகின்றது.

முன்னதாக 03.08.2019 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பூர்வாங்க ஏற்பாடுகள் துவங்கப்பட்டு, 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு கோ பூஜை, விநாயகர் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து, மூலவர் மஹிஷாசுர மர்த்தினிக்கு அஷ்ட திரவியங்களால் அஷ்டாபிஷேகம் செய்து பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம் சார்த்தி கலச ஆவாகனம் செய்துஸ்ரீ நவாக்ஷரி மூலமந்திர ஜபம், மூலமந்திர ஹோமம், வேதபாராயணம், சுவாசினி பூஜை, கன்யாபூஜை, மஹாபூரணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடந்து பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images