பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு
பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி
பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.
கோடான கோடி பலன்களை தரும் ஸ்ரீசக்கர பூஜை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இந்திய நாட்டில் வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ,காயத்ரி, மஹாமேரு, ஸ்ரீசக்ரம், அன்னபூரணி, பிரத்யங்கிரா தேவி, மஹிஷாசுர மர்தினி, வாசவி கன்யகா பரமேஸ்வரி மற்றும் பாரத மாதா ஆகியவர்கள் ஒரே ஸ்தலத்தில் சாந்த சொரூபமாக காட்சியளித்து அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
இவர்கள் வீற்றிருக்கும் இடம் ஆரோக்ய ஐஸ்வர்ய பீடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பீடத்தில் பல மஹாங்கள் தவம் இருந்து அம்பிகைகளின் அருள் பெற்றுள்ளனர். இந்த பீடத்தில் பல இடங்களில் பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். அம்பிகைகளுக்கு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கும் அபிஷேகம் மற்றும் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.
இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளது. 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிக்கைளுக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான். எனவே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று நடக்கும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நவாவரண பூஜையை தவறவிடாதீர்கள்.