Sarabheswara Prathishtabana Vizha

சரப ஹோம மந்திரம்

ஓம் ஹாம் சரபீஷாய நமஹ

சரபேஸ்வரர் யார் :

சரபேஸ்வர் எனும் சரப ஈஸ்வரர், சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர். உக்ர வடிவாக விளங்கும் இவர், உலக உயிர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ அம்சத்தைப் போற்றி வணங்குவோம். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் ப்ரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக ப்ரமனிடம் இருந்து, "தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது" என்ற அரிய வரத்தினை பெற்றான்.

தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் என கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதென கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.

எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்'' எனக் கேட்க, பிரகலாதணோ "என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்று கூறினான்.

கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தில், எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்க பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆகாச பைரவர் எனும் சரபேஸ்வரருக்கு ஆலய கும்பாபிஷேகம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது. இதன் பூர்வாங்க பூஜையாக 16.10.2020 வெள்ளிக்கிழமை துவங்கி 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை வரை சிறந்த வேதவிற்பன்னர்களை கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

சரபர் பிரதிஷ்டையின் சிறப்பு :

மிகவும் சக்தி வாய்ந்த இவர் அனைத்து விதமான தீமைகளையும் அழிக்க வல்லவர். தீவினைகள், நோய்கள், அபிசார கர்மாக்கள் எனப்படும் பாபச் சுமைகள் என பலவற்றையும் நீக்கி நன்மை அளித்து பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து பாதுகாப்பை அளிப்பவர். இவரை வழிபடுவது மேலும் ஆற்றல் மிக்க தெய்வீக சக்தியையும், நம் சுற்றுப்புறத்தைதத் தூய்மையையும், எதிர்மறை ஆற்றலையும் நீக்கி, மகிழ்ச்சியை தரக்கூடியவர் இவர். இந்த பிரதிஷ்டா வைபவத்தில் பங்கேற்ப்பவர்களுக்கு சரபேஸ்வரருடைய நல்லாசி கிடைத்து அன்றாட வாழ்வில் ஏற்படும் துஷ்ட சக்தி, சாபம் போன்றவற்றால் ஏற்படும் துன்பங்கள் குறைந்து, ஆரோக்கியம் தரக்கூடியதாகும். இப்பிரதிஷ்டா வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையுடன் வாழலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

கும்பாபிஷேகத்தின் பலன்கள் :

சரபேஸ்வரர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதின் மூலம் எதிர்மறை சக்திகளின் தாக்கம் குறையும், அனைத்து முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் காணலாம். மேலும் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும், மேலும் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு கிடைத்து, நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images