Sri Danvantri Jayanti Festival

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 05.11.2018 திங்கள்கிழமை, உத்திர நக்ஷத்திரம், திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாபெரும் தன்வந்திரி ஹோமமும் 108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் மந்திர ஜபத்துடன் தன்வந்திரி லேகியம் தயாரிக்கும் வைபவமும் சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும், சதுர்வேத பாராயணமும் நடைபெறவுள்ளது.

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி நாளாகும். அன்று உலக ஆயுர்வேத தினம் என்பதால் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில ஆலயங்களில் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சில இடங்களில் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்துக்கு லட்சுமிதேவி, வீரத்துக்கு பார்வதிதேவி, ஞானத்துக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள்.

நோய் தீர்க்கும் மகா மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணுவே நம:

தீபாவளிக்கும் தன்வந்திரி பகவானுக்கும் தொடர்பு உண்டு.

என்ன தொடர்பு என்கிறீர்களா?

‘பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி’ என்கிறது பாகவதம். தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினம்தான் இவரது அவதார தினமாக தினமாக இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயங்களில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும்.

பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் (கரண்டி) தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம்.

தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன. தன்வந்திரிக்கு அபிஷேகம் செய்து, அந்தத் தீர்த்தத்தை உட்கொள்ளலாம். தவிர, தன்வந்திரி பகவான் பிரத்தியேகமாக எழுந்தருளி இருக்கும் சில ஆலயங்களில், கிடைப்பதற்கு அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லேகியம் போன்ற ஒரு பதார்த்தத்தைப் பிரசாதமாக பக்தர்களுக்குத் தருகிறார்கள். இதை வாங்குவதற்கென்றே பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள். மூலிகைகளின் தன்மை சேர்ந்திருப்பதாலும், தன்வந்திரி பகவானின் அருள் கூடி இருப்பதாலும் இது போன்ற பிரசாதங்கள் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

ஆயுர்வேத வைத்திய முறையில் ஆராய்ந்து பல சிகிச்சை முறைகளை நமக்கு அருளியவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். புராணங்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன இன்றைக்கு பிரபலமான பல வைணவ ஆலயங்களில், தன்வந்திரி பகவானுக்குத் தனி சந்நிதி உண்டு. ஆனால், தன்வந்திரி பகவானுக்கென்று பிரத்தியேக ஆலயம் வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. இங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் ‘ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆரோக்ய பீட’த்தை அடையலாம்.

இதன் ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஆவார். சர்வதேச தரச் சான்றிதழ் (ஐ.எஸ்.ஓ.) பெற்ற பீடம் இது. இங்கு சிறப்புக் கடவுளாக தன்வந்திரி பகவான் அருள் பாலித்தாலும், கோசாலை, வைத்தியசாலை, அன்னசாலை, யாகசாலையுடன் 70க்கும் மேற்பட்ட தெய்வ சந்நிதிகள் அமைந்துள்ளன. 468 சித்தர் பெருமக்களையும் லிங்க வடிவில் இங்கே தரிசிக்கலாம். முனீஸ்வரரில் ஆரம்பித்து நமக்கு என்னென்ன தெய்வங்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றனவோ, அவை அனைத்தையும் இந்த ஆரோக்ய பீடத்தில் தனித் தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். இந்த பீடத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ள ஒவ்வொரு விக்கிரகமும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. இதழோரம் புன்னகை ததும்ப விக்கிரகங்கள் காட்சி தரும் அழகைப் பார்த்தால், அடுத்த சந்நிதிக்குச் செல்வதற்கு நேரம் பிடிக்கிறது. இந்த பீடத்துக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்தையாவது ஒதுக்கிக்கொண்டு வந்தால்தான், தரிசனம் முழுமை பெறும்.

இங்கு பிரதிஷ்டை ஆகி இருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான் சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே ஸ்ரீகஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக, தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, ‘டாக்டர் தன்வந்திரி’ என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார். அன்றைய தினம் திரளான பக்தர்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வருகிறார்கள். தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறார்கள். நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து லேகியமாக தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதிக்கப்பட்ட விசேஷ மருந்து, தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது (சாதாரண தினங்களில் சுக்கு, வெல்லம் மட்டுமே பிரசாதம்).

இதை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும். தன்வந்திரி பகவானை எளிமையான முறையில் வணங்க அந்த பகவானின் மகா மந்திரம் எனப்படும் மூல மந்திரமே போதுமானது. இதை தன்வந்திரி பகவானே அருளி இருக்கிறார். ‘மூன்று உலகங்களுக்கும் நாதனாக விளங்கும் எனது மகா மந்திரத்தை மிகுந்த பக்தியுடன் பூஜித்து பிரார்த்திப்பவர்களுக்கு, நான் அருள் புரிவேன். அவர்களது சர்வ வியாதிகளையும் நீக்குவேன். பூரண ஆயுளைத் தந்து, அனைத்து நலன்களையும் அருளி, அவர்களது வாழ்க்கையைச் சிறக்க வைப்பேன்’ என்கிறார் தன்வந்திரி பகவான். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images