இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி வருகிற டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.
மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் இவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.
ஹனுமான் அவதார நாளில் தன்வந்திரி பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி, ஆராதிக்க வேண்டும். இதில் அனைவரும் பங்கேற்று பயன் பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.