வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ரத சப்தமியை முன்னிட்டு இன்று 12.02.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பாவங்கள் நீங்க சூரியநாராயண ஹோமம் நடைபெற்றது.
நம் பாரத தேசத்தில் நம்மை வாழவைத்து கொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடி மகிழ்கின்றோம். அதேபோன்று சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி வருகின்றோம். அந்த நாள்தான் ரதசப்தமி தினமாகும். அதாவது உத்ராயண தை அமாவாசைக்கு பின்வரும் ஏழாவது நாள் (சப்தமிதிதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.
இந்த ரதசப்தமி நாளில் தான் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், இன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுபவர், தங்களுடைய பாவங்களில் இருந்து விடுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக சொல்லப்படுவது ரதசப்தமி விரதமே. நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானை, பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!” என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!
இத்தனை சிறப்புகள் வாய்ந்த ரத சப்தமி நாளான இன்று 12.02.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி சூரிய நாராயண ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி கண்கள் பிரகாசமாக இருக்கவும், உடலிலும், உள்ளத்திலும் உள்ள மறைமுக பிணிகள் நீங்கவும், ஒளிக்கதிர்களினால் நன்மைகள் ஏற்படவும், சூரிய பகவானின் அருள் கிடைக்கவும், துன்பங்கள், இன்னல்கள் நீங்கவும், சூரிய தசை, சூரிய புக்தி போன்றவைகளால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், நவக்கிரஹ தோஷங்கள் விலகவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version