வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27.10.2016, வியாழக் கிழமை அன்று காலை 7.45 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு வாஸ்து சாந்தி ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இது வரையில் 75 விதமான சன்னதிகள் சைவம், வைணவம், சாக்தம், செளரம், கெளமாரம் மற்றும் காணாபத்யம் போன்ற 6 மதங்களுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு அதற்குரிய தெய்வங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவை மட்டுமல்லாமல், 468 சித்தர்களை சிவ லிங்க ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு ஆலயம் அமைத்து பிரதி மாதம் வளர் பிறை பஞ்சமி மற்றும் வாஸ்து நாட்களில் விசேஷமான முறையில் யாக குண்டங்கள் அமைத்து பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் வாஸ்து பகவானை ஆவாஹனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை வாஸ்து தேவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், கட்டுமானப் பணிகளில் மற்றும் நாம் வசிக்கும் இடங்களில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக வாஸ்து சாந்தி ஹோமம் செய்வது பலன் தரும்.
வாஸ்து என்கிற சொல்லுக்கு, வஸ்து என்கின்ற பொருளும் உண்டு. வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள பூத கணங்களுக்கும், துர்தேவதைகளுக்கும் சாத்வீக பலி கொடுத்து அவற்றை ஏற்றுக்கொண்டு வேறு இடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக்கொண்டு பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, கட்டுமானப் பணிகளில் உள்ள குறைகளால் ஏற்படும் தீவிரத்தை குறைக்க வேண்டியும், புறத்தே இருக்கும் தேவதைகளை அகற்ற பிரவேச பலி போல உள்ளே இருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட வேண்டியும் இந்த ஹோமம் நடை பெறுகிறது.
மஹாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த ஹோமத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த வாஸ்து சாந்தி ஹோமத்தில் 100க்கு மேற்பட்ட திரவியங்களும், மூலிகைகலும், சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version