வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற27.07.2019 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பது போல் நல்ல மனை (பூமி) அமைவதும் அவரவர்களின் பூர்வ புண்ணியத்தை பொருத்ததே. நாம் வாங்கும் மனை வாஸ்துப்படி அமைய வேண்டும் என்றும், கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து பூஜை செய்ய வேண்டும் என்றும் விரும்புகின்றோம். அதற்கு கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர்18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை.
நாம் கடை, மண்டபம், வீடு, பொது கட்டிடங்கள் மற்றும் ஆலயங்கள் கட்டும்போது சிலர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கின்றோம். சிலர் பார்க்காமலையே இறைவனை பிரார்த்தித்து கட்டிட பணிகளை துவங்குகின்றோம். ஆனால் யார் இந்த வாஸ்து புருஷன் என்று தெரியுமா. அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்களை அறிந்து, நம் வீட்டைக் காக்கும் தெய்வமான வாஸ்து பகவானை வாஸ்து நாளில் பூஜித்துவிட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளை பெறலாம்.
வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.
ஆடி 11 வாஸ்து நாள்27.09.2019 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள வாஸ்து சாந்தி ஹோமத்தில் நவகிரகங்களின் திருவருளை பெறும் பொருட்டு நவதானிங்களையும், நவரத்தினங்களையும் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தில் சிறப்பு மூலிகைகளையும் சேர்க்கப்படுகிறது.
வாஸ்து சன்னதியில் அமைந்துள்ள அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள் அட்சதையைச் சமர்ப்பித்து தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபாடு நடைபெற உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோம பூஜையில் அனைவரும் பங்கேற்று பலன் பெற அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.