வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் இன்று27.07.2019 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.
அந்த வகையில் இன்று வாஸ்து நாளை முன்னிட்டு நடைபெற வாஸ்து சாந்தி ஹோமத்தில் நவகிரகங்களின் திருவருளை பெறும் பொருட்டு நவதானிங்களையும், நவரத்தினங்களையும், சிறப்பு மூலிகைகளையும் சேர்க்கப்பட்டது.
மேலும் இந்த வாஸ்து யாகத்திலும், அபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வாஸ்து குறைபாடுகள் நீங்கவும், வீடு மனை பாக்யம் பெறவும், வாஸ்து தோஷங்கள் அகலவும், மேலும் பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டு பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.